Tuesday, November 24, 2009

வினைப் பதிவுகள் - திருமணம்

வினா: சுவாமிஜி அவர்களே, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள் திருமணம் செய்து கொண்டபின் உடல் இணைப்பால் ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மகரிஷியின் விடை:

நிச்சயமாக பதிவுகளில் பரிமாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏற்படுவதே இருவரும் இணைந்து செயல்பட அல்லது எதிர்த்து சண்டையிட காரணமாகிறது. ஏற்கனவே ஒருவருக்கொருவர் உள்ள பதிவை மாற்றுவதற்குத்தான் இருவருமே இணைகிறார்கள். இதற்கான பதிவு ஏற்கனவே செயலுக்கு வந்த பிறகு தான் இயற்கை இருவரையும் இணைத்து வைக்கிறது. ஆனால் மேல் எழுந்த வாரியான பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும். அவையெல்லாம் ஒருவரை ஒருவர் பாதிப்பதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு செயல் பிடிக்கும் என்றால் மற்றவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Thursday, November 12, 2009

போரைத் தியானத்தின் மூலமாக நிறுத்த இயலுமா

வினா: சுவாமிஜி, இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரைத் தியானத்தின் மூலமாக நிறுத்த இயலுமா ?

மகரிஷியின் விடை:

இரண்டு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போரின் விளைவுகளையும், கொடுமைகளையும் தியானத்தின் மூலம் ஏற்படக் கூடிய மன அமைதியினால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். நிறுத்த முடியாது. தியானம் செய்தாலும் தனிமனிதனுடைய மனோசக்திக்கு ஓர் எல்லை உண்டு. போர் வெறியர்கள் அத்தனை பேருடைய மனதையும் மாற்றக் கூடிய அளவுக்குத் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றால் போரை நிறுத்தி, அமைதி ஏற்படுத்த இயலும்.

Thursday, November 5, 2009

நல்லவர் செத்துப் போகிறார்கள் - தீயவர் வாழ்கிறார்கள்

வினா: ஐயா, நல்லவர் செத்துப் போகிறார்கள். தீயவர் வாழ்கிறார்கள் ஏன் ?

மகரிஷியின் விடை:

இது என்ன? தீயவர்கள் மட்டும் சாவதில்லையா? நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் உண்டு. பிறந்து விட்டால் செத்து தான் ஆக வேண்டும். எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. வாழும் காலத்தில் என்ன செயல் செய்கிறோமோ அதற்குத் தகுந்தவாறு விளைவு உடனோ பின்னோ வருகிறது.

Wednesday, November 4, 2009

மற்றவர்களும் தங்களைப் போல் சித்தி பெறுவது அரிதாகும்

வினா: சுவாமிஜி, தாங்கள் சித்தி பெற்று இருப்பது தங்களின் தவ வலிமை அல்லது ஊழ் அல்லாமல் வேறொன்றுமில்லை என்று கருதுகிறேன். மற்றவர்களும் தங்களைப் போல் சித்தி பெறுவது அரிதாகும் என்பது எனது தாழ்மையான எண்ணம்?

மகரிஷியின் விடை:

அன்பரே, ஊழ் என்பது முன்பிறவியில் செய்த வினை அல்லது பழவினை என்பதாகும். தவவலிமை என்பது இப்பிறவியில் முயற்சி செய்து பெற்ற உயிர்த்தூய்மை என்பதாகும். தவ வலிமையால் நான் உயர்ந்துள்ளதாக நீங்கள் ஒப்புக் கொண்டல் இப்பிறவியில் நீங்கள் செய்யும் தவப்பயிற்சி வரும் பிறவியில் உங்கள் குழந்தைகளுக்கு ஊழ் வினையாக நலம் தராதா ? உங்கள் வினாவிலேயே விடையும் உள்ளதே.

Tuesday, November 3, 2009

நான் தத்துவ ஆராச்சி செய்ய நினைக்கிறேன்

வினா: ஐயா, நான் தத்துவ ஆராச்சி செய்ய நினைக்கிறேன். எனக்கு அறிவுரை கூறுங்கள் ?

மகரிஷியின் விடை:

ஐந்து அடி உயரம் உள்ள தந்தை அவரைப் பந்தலில் காய் பறிக்கிறார். அவருக்கு காய் எட்டவில்லை. அருகில் இருந்த அவரது ஐந்து வயது மகன், "அப்பா நான் காய் பறித்து தருகிறேன்", என்கிறான். "உன்னால் எப்படி முடியும்", என்கிறார் தந்தை. அதற்கு அவன், "என்னைத் தூக்கி உங்கள் தோளில் அமர்த்திக் கொள்ளுங்கள்" என்கிறான்.

தந்தையும் அவ்வாறே செய்ய மகன் எளிதாகக் காய் பறித்து கொடுக்கின்றான். அன்பரே, என்னுடைய 89 ஆண்டுகால வாழ்க்கையில் இளமைப் பிராயமான 20 ஆண்டுகளைக் கழித்து விட்டால் 69 ஆண்டுகள் ஆன்மீக வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவத்தை, ஆராச்சியை உங்களுக்கு கொடுத்துள்ளேன். தவ முறைகளும், தத்துவமும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளேன்.

இதை நீங்கள் பயிற்சி செய்து வாழ்வின் நோக்கத்தை உணரலாம். உடல் நலம், மன நலம் பெற்று சிறப்பாக வாழலாம். அதற்கு மேல் உங்கள் ஆராச்சியை அமைத்துக் கொள்ளலாம்.

Monday, November 2, 2009

எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது, அது ஏன் ?

வினா: சுவாமிஜி, எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது, அது ஏன் ?

மகரிஷியின் விடை:

எதிர்பாராதவிதமாக மனதிற்கு அதிர்ச்சியூட்டும் செயல்களால் பாதிப்பு ஏற்பட்டோ அல்லது அடிக்கடி சினப்பட்டதாலோ உடலில் நரம்புகள் தளர்ச்சியுற்றுள்ளது. அடிக்கடி இவ்வாறு அதிர்ச்சி ஏற்படும் போது அதை தாங்க முடியாமல் மனதில் பயம் தோன்றுகிறது. பெரும்பாலும் மக்கள் ஏதோ ஒரு வகையில் விந்து நாதாத்தை(sexual vital fluid) இழந்து விடுகிறார்கள். இவ்வாறு உயிர்ச் சக்தியை அதிக அளவு இழப்பதாலும் பயம் தோன்றுகிறது.

உடலை நல்ல முறையில் பாதுகாத்து, நரன்புத் தளர்ச்சி ஏற்படாது இருக்க உடற்பயிற்சியுடன் காயகல்பப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வரவேண்டும். மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள தியானமும், நல்ல ஒழுக்கப் பழக்கங்களையும் கடைப் பிடித்து வரவேண்டும்.