Wednesday, October 28, 2009

தாங்கள் விளக்கும் போது இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது !?!?

வினா:

சுவாமிஜி, தாங்கள் விளக்கும் போது இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லையே ஏன் ?

மகரிஷியின் விடை:

இறைநிலை பற்றிய விளக்கம் மிகவும் எளிதானதே. எல்லோராலும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு எளிதாக உள்ளதை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினார்கள் என்று எண்ணிய போது என் உள்ளத்தில் எழுந்த காட்சி இது. ஒரு நூல் கண்டை குழந்தையிடம் கொடுத்து விட்டு தாய் சென்று விடுகிறாள். குழந்தை அதை எடுத்து கலைத்துப் போட்டு சிக்கலாக்கி விடுகிறது. பிறகு தாய்க்கு எது ஆரம்பம் என்று தெரியாமல் வெட்டி வெட்டி போட்டு விடுகிறாள். அதே போன்று தான் இறைநிலை விளக்கம் எல்லாம் துண்டு துண்டாகப் போய்விட்டது. பின்னால் வந்தவர்கள் அதை ஒன்றுபடுத்திப் பார்க்க இயலாமையே இறைநிலை பற்றிய விளக்கம் சிக்கலாக காரணமாகிறது


.

Tuesday, October 27, 2009

நல்லவர்களுக்கு துன்பம் ஏற்படுவது ஏன்?

வினா: சுவாமிஜி, நல்லவர்களுக்கு துன்பம் ஏற்படுவது ஏன் ?

மகரிஷியின் விடை:

பரிணாமத் தொடர்ச்சியான மனிதகுலம் கூட்டமைப்பில் தான் வாழ முடியும். ஒரு நாளைக்கு நாம் உண்ணுகிற உணவில், எத்தனை பேருடைய எண்ணம், உழைப்பு, உழைக்கும் போது உடல்படும் துன்பத்தில் ஏற்படும் வருத்த அலைகள் இவை அனைத்தும் சேர்ந்த வினைப்பதிவுகளோடு தான் பெறுகிறோம்.

சமுதாயத்தில் ஏற்படும் வினைப்பதிவுகளை நாம் ஒவ்வொரு நாளும் பங்கிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது செயலுக்கு வராது இருக்க இதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தோம் ? அதைச் சமன் செய்யது(Neutralise) உணவை எடுத்துக் கொள்கிற போது அதன் பதிவுகள் எல்லாம் போய்விட வேண்டும். அந்த அளவுக்கு தன்னில் தானாகி தான் வாழ்வது என்ற நிலைக்கு மனிதன் வந்தால் அப்பதிவுகளைக் கூட தவிர்க்கலாம்.

இறைநிலை எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. மனிதனின் மனத்தின் ஆழத்திலும் அதுவே இருக்கிறது. மனத்தால் நினைப்பது அங்கு பதிவாகிறது. அது தான் செயல். காலத்தால் அங்கேயே விளைவு வருகிறது. அதை மாற்றிக் கொள்ள மனிதன் எப்பொழுதும் நல்லதையே நினைக்கப் பழக வேண்டும். எந்த நேரத்திலும் பொறாமை கூடாது.

ஒரு மனிதன் மற்றொருவனுக்கு தீங்கு செய்ய நினைக்கிறான். நினைப்பவன் கருமையத்தில் அதுவே பதிவாகி அவனைக் கெடுத்த பிறகுதான் அது வெளிவரும். புறப்படுகிற இடத்தில் எழும் தீய எண்ணம் அதுவாக அங்கேயே மாறித்தான் பிறகு பிறரைத் தாக்குகின்றது.

இந்த அளவுக்கு மக்களுக்கு அறிவறியும் தன்மை வேண்டும். இதை வைத்துத் தான் மனிதனுக்கு மனம்+இதன் என்று பெயர் வைத்தார்கள். மனதின் தன்மையை உணர்ந்து அதை இதமாக வைத்துக் கொள்ளக் கூடியவன் தான் மனிதன்.

Tuesday, October 20, 2009

பொருளாதாரம், அரசியல், மதம்

வினா:

சுவாமிஜி, இன்றைய அரசியல், பொருளாதார நிலைகளில் உள்ள சீர்கேடுகள் எவ்வாறு நீங்கும் ?

மகரிஷியின் விடை:

உழைக்காமல் இருக்கக் கூடாது என்று கடமைகளை வலியுறுத்தவும், கடமையின் மேன்மை பற்றி உணர்த்தவும் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் தான் பிற்காலத்தில் பொருளாதாரம் என்ற துறையாகியது. பொருட்கள் ஈட்டல், காத்தல், துய்த்தல், பிறர்க்களிதல் என்ற கூட்டுறவை உணர்த்த வகுக்கப்பட்ட சமுதாய நெறிமுறைகள் அரசியல் துறையாகியது. கடமைகளைச் செய்வதிலும் பொருள்துறையிலும் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்தாமல் இருக்க உணர்த்திய நெறிமுறைகள் மதங்கள் என்றாயிற்று. என்றாலும் இப்பொறுப்பில் உள்ள மனிதர்கள் பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் இத்தனை சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.

பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மூன்று துறைகளிலும் பொறுப்பிலுள்ளவர்களுடன் சமுதாய நலத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களும் கூடி, தன்னல நோக்கமின்றி விஞ்ஞான அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டுத்தான் இச்சீர்கேடுகளை போக்க வேண்டும்.

Monday, October 19, 2009

வாழ்வில் வெற்றியும் மேன்மையும் அடைய உரிய வழி

வினா:

சுவாமிஜி, என்னைச் சூழ்ந்துள்ளவர்களுடைய பொறாமையை வென்று அவர்கள் தரும் தொல்லைகளை எதிர்த்து வாழ்வில் வெற்றியும் மேன்மையும் அடைய உரிய வழியினை அருள் கூர்ந்து சொல்லித் தரும்படி வேண்டுகிறேன் ?

மகரிஷியின் விடை:

நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும் திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவமுடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் " எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்? " என்று கணித்துக் கொள்ளுங்கள். அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில் சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்து அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும் ?

தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன. உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக் கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும், ஆற்றலைச் செலவிட வேண்டும். இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச் சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்ம யோகம்" இதில் அடங்கியிருக்கிறது.

Tuesday, October 13, 2009

நேர்மை

வினா:

ஐயா, நான் இதுவரை வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து வாழ்ந்து விட்டேன். ஆனால் நான் பெற்றதோ, துன்பமும் கஷ்டமுமே ஆகும். இப்போது நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் என்ன செய்ய ?

மகரிஷியின் விடை:

அறநெறியில் நம்பிக்கையோடு தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். வினைப்பதிவுகள் தீரும் காலத்தில் துன்பம் தோன்றும். அதை அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும். அதற்கு வேறு மாற்று வழியில்லை.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நேர்மையற்ற முறையில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். பிறகு உண்மை புரியும்.

Friday, October 9, 2009

மொழிவெறி கூடாதா ?

வினா:

சுவாமிஜி, மொழிவெறி கூடாதா ?

மகரிஷியின் விடை:

மொழிவெறி மட்டுமல்ல. எதன் மீதும் வெறி கூடாது. அது உணர்ச்சிவயப்பட்ட நிலை. அது தனக்கும் சமுதாயத்திற்கும் துன்பத்தையே விளைவிக்கும்.

மதுவெறி ஜீரணமாகும் வரை இருக்கும். காமவெறி விந்து உற்பத்தி குறையும் வரை இருக்கும். மதவெறி அறிவின் விளக்கம் கிடைத்தால் தணிந்து விடும். புகழ் மற்றும் பணவெறி உடல் வலிவு உள்ளவரை நீடிக்கும். நாட்டுவெறி, மொழிவெறி அந்த நாடோ அல்லது மொழியோ அழியும் வரை இருக்கும்.

Tuesday, October 6, 2009

தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும் பலவீனமா

வினா:

சுவாமிஜி, தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும், மற்றவருக்காக இறங்குவதும் மனிதனின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது ?

மகரிஷியின் விடை:

தர்மம் செய்வதும், பிறர் துன்பம் கண்டு இறங்குவதும் தான் மனிதன் இயல்பாகும். இது பலவீனம் அல்ல. ஆன்மாவின் பலமாகும். வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்.

ஒருவர் பிச்சை எடுக்கிறான் என்றால் அங்கு தான் ஏழ்மை மற்றும் பலவீனம்(Poverty and Weakness) வருகிறது. பட்டினி கிடப்பவனுக்கு உணவு அளிக்க வேண்டியது தான். ஆனால் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இருப்பவனுக்கும், வீட்டில் சென்று அறுசுவை உணவு உண்பவருக்கும் சாப்பாடு போடுவது தர்மம் ஆகாது.

Monday, October 5, 2009

சித்தர் பாடல்களுக்கு விளக்கம்

வினா:

சித்தர் பாடல்களுக்கு தெளிவான, எளிமையான விளக்கம் எழுத வேண்டுகிறேன்.

மகரிஷியின் விடை:

யான் பேசி வரும், கற்பிக்கும், எழுதும் தத்துவங்கள், விளக்கங்கள் அனைத்துமே சித்தர் பாடல்களுக்கு விளக்கம்தான். சித்தர்களது பாடல் புரியாத புதிர் போன்ற வார்த்தைகளால் இருப்பதால் அதன் பொருளை அறிய ஆவல் கொள்கிறீர்கள். நான் வெட்ட வெளிச்சமாக, தெளிவாக அதே உண்மையை விளக்கி எழுதுவதால் இவ்வளவுதானே என்று நினைக்க தோன்றுகிறது.

வாழ்த்துவது

வினா:

சுவாமிஜி, நேரில் போய் ஒருவரை வாழ்த்தினால் அதைக் கேட்பவர்கள் நமது நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பாகுமல்லவா ?

மகரிஷியின் விடை:

உண்மை தான். எனினும் நம் வாழ்த்தினை அவர்கள் செவிமடுக்க வேண்டுமே! ஏற்பு நிலை இல்லாவிட்டால் நமது எண்ணத்துக்குள்ளாக வாழ்த்துவதே சிறந்தது. நேரில் வாழ்த்துவதைச் சிலர் விரும்பமாட்டார்கள். மனதால் நாம் வாழ்த்துவதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். உயிரற்ற பொருட்கள், செடிகளிடம் கூட வாழ்த்து பயனளிக்கிறது.