Thursday, January 21, 2010

எந்த நேரத்தில் தியானம் செய்யலாம் ?

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்.

'தீட்டா அலை'யிலும், 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கா. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒளிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலக எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை". என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்த சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். அதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

Wednesday, January 20, 2010

மனித வாழ்வின் சிக்கல்களுக்கும் துன்பத்திற்கும் முந்திய செயல்களின் விளைவுகளே காரணம் என்றால்....

வினா: சுவாமிஜி, இன்றைய மனித வாழ்வின் சிக்கல்களுக்கும் துன்பத்திற்கும் முந்திய செயல்களின் விளைவுகளே காரணம் என்றால் சாதாரண மனிதன் ஒத்துக் கொள்ள மாட்டான் அவனுக்கு இதை எப்படி விளங்க வைப்பது ?

மகரிஷியின் விடை:

சினவயப்பட்ட ஒருவன் தன் மனைவியைக் காலால் ஓங்கி உதைத்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். உதைபட்ட அவள் வலியால் துடிக்கிறாள். அந்த வலியை, துன்பத்தை உணர்வது அந்த உயிரில் விளங்குகின்ற இறைவன் தானே. 'என்னை உதைத்த உன் காலில் கரு நாகம் தீண்ட' - அந்த உயிரின் துன்பம் சாப அலையாக அவள் கருமையத்திலிருந்து ஓலமிடுகிறது.

இந்தத் துன்ப அலை சாப அலையாக மாறி உதைத்தவன் கருமையத்தில் வினைப்பதிவாகிறது. சாபமிட்டவர் கருமையத்திலும் மீண்டும் பிரதிபலிக்கிறது. அத்தோடு ஒரு கருநாகத்தின் கருமையத்திலும் பதிவாகிறது.

வினைவிளைவாகும் காலம், இடம் கனிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்று உதைத்தவன் இருட்டில் நடந்து செல்கிறான். அவன் கால் வைத்த இடத்தில் அப்பதிவைப் பெற்ற கரு நாகம் அது தன் வினையை முடிக்க அவன் காலில் கடிக்கிறது. அவன் வலியால் அலறித் துடிக்கிறான்.

மனிதன் எப்பொழுதும் எல்லோருக்கும் கெட்டவனாக இருப்பதில்லையே! அதே மனிதன் ஒரு காலத்தில் செய்த நன்மையால் நெகிழ்ச்சியுற்ற ஒருவர், "நீ, மகராசனா இருக்கணும், உனக்கு வாழ்க்கையில் ஒரு குறையும் வரக்கூடாது" என்ற வாழ்த்துதலைப் பெற்ற பதிவும் அவன் கருமையத்தில் இருக்கிறது.

எப்படி கருநாகத்திற்கு அந்த சாப அலை பதிவானதோ அதே போன்ற 'இவருக்கு குறை வரக்கூடாது, வந்தால் நீங்க வேண்டும்' என்ற பதிவைப் பெற்ற ஒரு பச்சிலை மருத்துவர் அந்த வழியாக வந்து கொண்டு இருக்கிறார். பாம்புக்கடிபட்டவருக்கு உடனே வைத்தியம் செய்து அவரைக் குணப்படுத்துகிறார்.

இறைவனே மனிதனாக வந்துள்ளான் என்பதை இங்கு தான் மனிதன் உணர்ந்து கொள்கிறான். 'கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்' என்று வாய்விட்டுச் சொல்கிறான். இவ்வாறு தீமையான செயலில் விளைவு துன்பமாக வர, மற்றோர் நன்மையான செயலின் விளைவு அந்தத் துன்பத்தைத் துடைக்க, இப்படி வாழ்கை முழுவதும் செயலின் விளைவுகள் பின்னிப் பிணைந்து இன்ப துன்பமாக விளைந்து கொண்டேயிருக்கிறது.

Wednesday, January 13, 2010

அசைவ உணவு உண்ணும் மேல்நாட்டு மனிதர்கள் தானே நம்மை விட மிகச் சிறந்த விஞ்ஞான ஆராச்சி எல்லாம் செய்கிறார்கள் ?

.

வினா: சுவாமிஜி, சைவ உணவு மனிதனுக்கு ஏற்றது என்கிறீர்கள். ஆனால் அசைவ உணவு உண்ணும் மேல்நாட்டு மனிதர்கள் தானே நம்மை விட மிகச் சிறந்த விஞ்ஞான ஆராச்சி எல்லாம் செய்கிறார்கள் ?

மகரிஷியின் விடை:

ஆராய்ச்சி செய்து என்ன பயன் ? சைவ உணவு உண்ணும் இவர்கள் மெதுவாக மனிதர்களைக் கொன்றால் அசைவ உணவு உண்ணும் அவர்கள் ஒரே நேரத்தில் கோடிக் கணக்கில் மனிதர்களை கொல்ல ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த விஞ்ஞான அறிவால் என்ன பயன் ? அது மனித வாழ்விற்கான விஞ்ஞானம் இல்லையே. தானும் வாழவேண்டும் ; பிறரையும் வாழவிட வேண்டும் என்பது தான் மனிதனுக்கு ஏற்ற விஞ்ஞானமாகும். அது எங்கே வளர்ந்தது என்று பாருங்கள். அசைவ உணவு உண்ணும் மேலை நாடுகளின் சரித்திரத்தைப் பாருங்கள். அவ்வப் போது படை எடுத்து சிறிய நாடுகளை நசுக்கித் தன்னோடு சேர்த்துக் கொண்ட நாடுகள் தான் அவை. அவர்கள் பிறர் வாழப் பொறுக்க மாட்டார்கள். அதுவா மிகச் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி ?

.