Wednesday, September 30, 2009

தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா

வினா:

ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்யவைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா ? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனிதமனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே ? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே ? விளக்க வேண்டுகிறேன் ?

மகரிஷியின் விடை:

அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணந்தவர்கள் பஞ்ச பூதங்களையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அந்த கையவர்கள் இறங்குவார்களா ? என்பதை ஒருவர் மிக நுணிகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனவலைக்கலையில் தேர்ந்த அன்பர் ஓர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்தாக எவ்வாறு நம்புவது என்று தான் சொல்வீர்கள்.

என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துபோவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப் போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, கனிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கி கொள்ள முடியும்.

ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம் : மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும் ? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொரு வரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவது அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும் ? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறர்க்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.

நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்ணுகிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்து உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்து போகலாம். இதனால் மருந்துக்கு வலுவில்லை என்று கொள்ள முடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.

மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ , சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கிச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும். இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகின்றார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்.

Monday, September 28, 2009

மனிதனுக்கு புகழ் எவ்வாறு கிடைக்கும்

வினா: சுவாமிஜி, மனிதனுக்கு புகழ் எவ்வாறு கிடைக்கும் ?

மகரிஷியின் விடை:

மனிதன் எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதில் புகழ் இல்லை. என்ன நல்ல செயல்களை சமுதாயத்திற்கு செய்து கொண்டிருக்கிறான் என்பதில் தான் புகழ் இருக்கிறது. புகழ் என்பது தன்முனைப்பிற்கு போடும் தூபம் அல்ல. நற்செயலின் விளைவினால் பயனடையும் மக்கள் அன்போடு கொடுக்கும் மதிப்புணர்வே புகழாகும். நீங்கள் புகழைத் தேட முயற்சித்தீர்களானால் அந்த வேட்பே புகழ் உங்களை அணுகாமல் துரத்தும் சக்தியாகும்.

Thursday, September 24, 2009

சுவாமிஜி, தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்

வினா: சுவாமிஜி, தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் ?


மகரிஷியின் விடை:

நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல, உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மனநலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்.

ஐயா, தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன் ?

வினா: ஐயா, தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன் ?

மகரிஷியின் விடை:

குருவின் கால்களைத் தொட்டு வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும். நாம் தூய்மை பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. அதனால் மக்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களை இறைநிலை வரை உயர்த்தி விட்டிருக்கிறேனே. இன்னும் ஏன் குனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் ? குருவின் ஆசியைப் பெற அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது.

Wednesday, September 23, 2009

நல்லமுறையில் வாழும்போதே சில சமயம் சிக்கல்.இதை மாற்ற இயலுமா?

வினா:

சுவாமிஜி, நல்லமுறையில் வாழும்போதே சில சமயம் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். இதற்குக் காரணம் என்ன ? இதை மாற்ற இயலுமா ?

மகரிஷியின் விடை:

வாழ்கைச் சிக்கல்கள் மூன்று காரணங்களால் ஏற்படுகின்றன.1.ஆகாமியம் 2.பிராரப்தம் 3.சஞ்சிதம்.

சஞ்சிதம் என்பது முன்னோர்களின் செயல் பதிவுகள். தலைமுறை தலைமுறையாக கருவழியே தொடரும் பாவப் பதிவுகளாகும். அதை அனுபவித்து தீர்க்கவே உடல் எடுத்து வந்துள்ளோம். அவரவர் வாழ்வில் தவறு செய்திராவிட்டாலும் முன் வினையின் காரணமாக துன்பம் அனுபவிக்க வேண்டிவரும். "இப்பிறவி" என்பது உயிரின் பரிமாணத்தில் ஒரு சிறு பகுதியே. எதிர்பாராது வரும் சிக்கல்களுக்கு இம்முன் வினைகளே காரணம். தவமும் அறமும் இணைந்த அருள் வாழ்வு மூலம் தான் இதனை மாற்ற இயலும்.

Monday, September 14, 2009

நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி....

வினா:

ஐயா, நீங்கள் பெண்களை உயர்த்திப் பேசி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றீகள் இது சரியாய் ?

மகரிஷியின் விடை:

நீங்கள் இந்த உலகத்திற்க்கு எப்படி வந்தீர்கள்? உங்களை ஒரு பெண் அல்லவா தன் வயிற்றில் பத்து மாதம் வைத்து காத்து உருவாக்கினாள்! அப்பொழுது அவள் உண்ட உணவை, அவள் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டுக் கொண்டீர்கள்? மேலும் முதலில் இந்த உலகிற்கு வந்தீர்களே, அங்கு உங்களுக்கு தன் இரத்தத்தை அல்லவா பாலாக மாற்றி முதல் உணவாக அளித்தாள்.

நாம் கடைகளில் சென்று ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது அந்தக் கம்பெனியே உங்களுக்கு முதல் பெட்ரொலை இட்டு நிரப்பி நீங்கள் சிறிது தூரம் வாகனத்தை இயக்குவதற்கு உதவி செய்வது போல், தாய் தானே உங்களக்கு தன் இரத்தத்தைப் பாலாக்கி முதல் உணவு (Fuel) அளித்து நீங்கள் உயிர்வாழ உதவினாள். அதற்கு மேலும் பல மாதங்கள் அந்த தாயின் பாலைக் குடித்துத்தானே வளர்ந்தீர்கள்.

"அந்தப் பெண்மைதானே உங்களுக்கு வாழ்கைத் துணையாகவும் வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடுபேறு அடையவும் உதவுகின்றாள். இதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடிமா? இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தை போற்றுவதில் உங்களுக்குக் கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வரவேண்டும்?"