Thursday, February 20, 2014

"ஜீவசமாதி" என்பது என்ன?

கேள்வி : சுவாமிஜி, "ஜீவசமாதி" என்பது என்ன? அதுபற்றிய விவரத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வேதாத்திரி மகரிஷியின் பதில்: ஒருவர் தவத்தின் மூலமாகவும், தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப்பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும்விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மனஇயக்கம், உடல் இயக்கம் நின்றுவிட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிருப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதுவே ஜீவசமாதி.

இதுபோலத் தமிழ்நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.

அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளார்கள். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்றபோது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.

சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. ஜீவன் என்றால் உயிர். சமாதி என்றால் சமன்-ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள்

கேள்வி: மகரிஷி அவர்களே, முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் பதில்: பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒருமுறை நம்மிடம் பதிந்துவிட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.

அதாவது ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள. ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுள்ளவரை திரும்பத் திரும்பப் பரதிபலிக்கும் வேகம் உண்டு. அதன்பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்து விடும்.

இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலைமுறைகளிலும் (Generations) விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலை முறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலைமுறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.

மெய்ஞ்ஞானம், விஞ்ஞானமும் இணைய வேண்டிய அத்தியாவசியம் என்ன ?

கேள்வி: சுவாமிஜி மெய்ஞ்ஞானம், விஞ்ஞானமும் இணைய வேண்டிய அத்தியாவசியம் என்ன ?

வேதாத்திரி மகரிஷி விடை: புலணுணர் பொருட்களைப் பகுத்துப் பிரித்துக் கூர்ந்து அறிவது விஞ்ஞானம்.

புலன்களுக்கு எட்டாத இறைநிலை, நுண்பொருளான விண் எனும் உயிர்த்துகள், காந்த அலையாகிய மனம் இம்மூன்றையறிவது மெய்ஞ்ஞானம்.

மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானமும், விஞ்ஞானம் இல்லாத மெய்ஞ்ஞானமும் முழுமை பெறா. மெய்ஞ்ஞானத்தை புறக்கணித்த விஞ்ஞானம் மனித வாழ்வின் வளத்தை அழிக்கும்; மனிதகுலத்தை அழிக்கும் கருவிகளை உற்பத்தி செய்யத் தூண்டும்; மனித மனத்தைத் தவறான பாதையில் திருப்பும்.

மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வில் நலம் காணும். மனித வாழ்வு வளம்பெற மெய்ஞ்ஞானமும் வேண்டும், விஞ்ஞானமும் வேண்டும். இரண்டும் இணைந்து ஒன்றுபட்டு மனிதகுல வாழ்விற்குப் பயனாக வேண்டியது இக்காலத்தின் தேவையாகிவிட்டது.

"விஞ்ஞானம் இல்லாத மெய்ஞ்ஞானம் குருடு, மெய்ஞ்ஞானம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி" என்ற கருத்து உற்று நோக்கத்தக்கது.

"Science without religion is lame, religion without science is blind." - Albert Einstein

மனவளக்கலை புத்தகங்களைப் படித்தே தவம் செய்யலாமா?

கேள்வி: ஐயா, தங்களுடைய மனவளக்கலை புத்தகங்களைப் படித்தே தவம் செய்யலாமா?

வேதாத்திரி மகரிஷி விடை:

செய்யக் கூடாது! தெளிந்த ஆசிரியரின் மூலமாக்த் தான் தவம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நான் புத்தகங்களில் தவம் செய்யும் முறை பற்றி விலக்கவில்லையே! மனவளக்கலை மன்றங்களோடு தொடர்பு கொள்ளுங்கள், எளிதில் அகத்தவம் கற்றுக் கொடுப்பார்கள்.